தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை – 13

குமரி ஆதவன்

25th Jan 2019

A   A   A

நாகர்கோவில் விடுதி வாழ்க்கை என்றென்றும் மறக்க முடியாதது. அது எனக்கு ஈட்டித் தந்த நட்புகள் என்றென்றும் பசுமை மாறாமல் மனதை ஈரப்படுத்திக் கொண்டே நிற்கிறது.

மாலை நேரமானால் விடுதிக்கு முன்னால் இருக்கும் படிக்கட்டில் வந்து அமர்ந்திருப்பேன். இரண்டொரு நிமிடத்தில் பத்துபேர் கூடிவிடுவார்கள். கல்லூரிக் கதை, பேருந்து நிலையக் கதை, அரசியல் கதை என சுவாரசியம் குறையாமல் கதை ஓடும். சிரிப்பும் சத்தமும் உச்சம் தொடும். விவாதம் சண்டைபோல் மாறும். பக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருப்பதால் அங்கிருந்து ‘சப்தமிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்வார்கள். இளமையின் வேகம் அவர்கள் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டதே இல்லை.

இந்தக் கூட்டத்தில் எங்கள் விடுதி காவலாளர் அம்சி முருகன் அவர்களும் கலந்து கொள்வார்கள். அழகான கையெழுத்துக்குச் சொந்தக்காரரான அவர் அவ்வப்போது மாணவர்களின் திட்டக் கட்டுரைகளுக்கு தலைப்புகளை அழகாக எழுதித் தருவார். நாங்கள் சமையல் சுவை இல்லை என்று திட்டினாலும், சமையல் கலைஞர்கள் வில்சன், செல்லப்பன், தாணு மூவரும் அதை உடனே மறந்துவிட்டு எங்களோடு விளையாடி மகிழ்வார்கள்.

வழக்கமாக இட்லி போடுகிற அன்று ஒரு கூட்டம் மாணவர்கள் இட்லிக்கு விளம்பரம் செய்வார்கள். “வீடு கட்டத் தேவையான செங்கல் வேண்டுமா? ஒருவரை எறிந்து மண்டையை உடைக்க வேண்டுமா? வருகை தாருங்கள், எங்கள் விடுதி இட்லியை வாங்கிச் செல்லுங்கள், முற்றிலும் இலவசம் … இலவசம்…” எனச் சப்தமிடுவார்கள். இதைக் கேட்டுக் கொண்டே எங்களோடு சேர்ந்து சிரிப்பான் வில்சன். ‘வாடன் தாறத இல்லியா போட முடியும். இவனுகளுக்கெல்லாம் கொழுப்பு என்பார் செல்லப்பன். ‘இறைச்சி பாதி வாடன் வீட்டுக்குப் போவுது, இண்ணைக்கு விடாதுங்க என்பார் காவலாளி முருகன்.

கல்லூரிகளுக்குச் சென்றுவிட்டு வந்ததும் திருநெல்வேலி நண்பர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதுவார்கள். பத்துபேர் சேர்ந்து ஆட்சியர் அலுவலகம் ஓடி மனு அளித்து வருவார்கள். மறுநாள் கண்துடைப்புக்கு ஒரு அதிகாரி வருவார்@ விசாரணை நடத்துவார், போவார். இப்படி எத்தனை முறை எத்தனை அதிகாரி வந்தாலும் எங்கள் விடுதிக் காப்பாளர் அசைந்து கொடுத்ததே இல்லை. நான் பயின்ற மூன்றாண்டுகளில் ஒருநாள் கூட மாணவர்களிடம் படியுங்கள் என்று சொன்னதும் கிடையாது, அவர் விடுதியில் தங்கியதும் கிடையாது.

ஒருவரது ஊழலை எதிர்க்க வேண்டும், குறுக்குவழி மனிதர்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது, நமது உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற உணர்வுகளையெல்லாம் எனக்குள் ஊட்டியது வெளி மாவட்டங்களிலிருந்து வந்து படித்த மாணவர்கள்தான்! தமிழ் மீது தீராத காதலும், இலங்கைத் தமிழர் மீதான பரிவையும் எனக்குள் உருவாக்கியவர்களும் இதே மாணவர்கள் தான். இலங்கை தமிழர்கள் குறித்த நீண்ட உரையாடல்கள் எனக்குள்ளும், ஒருநாள் தனி ஈழம் மலராதா என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இலங்கை விடுதலைப் போராட்ட வீரன் பிரபாகரன் குறித்த வீரம் செறிந்தப் பேச்சோடு, கியூபாவின் பெடல்காஸ்ரோ, சேகுவேரா, நெல்சன் மண்டேலா, பகத்சிங் போன்றோரின் தியாகங்கள் எல்லாம் இங்குதான் ஆழமாக விவாதிக்கப்பட்டன. இப்படி அறிவையும் புரட்சியையும் விரிவுபடுத்திய மாணவர் இல்லத்தை எப்படி மறக்க முடியும்?

இளமைப்பருவம் எப்போதுமே, நன்மையையும் தீமையையும் செய்யும். அந்தப் பருவத்தில் செய்கிற சில விளையாட்டுச் செயல்கள் இளையோருக்கு நேரப்போக்காகவும் மற்றவர்களுக்கு சங்கடமாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படி பல செயல்கள் எங்கள் விடுதியில் நடந்தது. விடுதிக்கு இருபக்கங்களிலும்; வீடுகள் இருந்தன. இந்த வீட்டுக்காரர்களுக்கும் எங்களுக்கும் வாரத்தில் மூன்று நாளேனும் சண்டைதான். காரணம் இரவு இரண்டு மணியானாலும் ஒரு கூட்டம் மாணவர்கள் உறங்கமாட்டார்கள். நடு ராத்திரியில் பாடிக்கொண்டிருப்பது, ஊளையிடுவது என லீலைகள் தொடரும். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்கள் குவியும். யார் உளையிட்டதென்று யாரும் சொல்லமாட்டார்கள். அவர்களும் சிரித்தபடி நகர்வார்கள்.

எங்கள் விடுதியைச் சுற்றிச் சுமார் பத்து தென்னை மரங்கள் நின்றன. இவற்றை நாகர்கோவிலைச் சார்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். அவருக்கு ஒரு கையில் பாதிதான் இருக்கும். அந்தக் கையை மட்டும் துண்டால் மூடியிருப்பார். நெடிய கறுத்த முகம் அச்சமூட்டும் தோற்றத்திலேயே இருக்கும். இவரது அடாவடித் தனத்தில் யாரோ அவரது கையை வெட்டி எடுத்ததாகவும், இப்போதும் இவர் பெரிய ரவுடி என்றும் எங்கள் விடுதி காவலர் கதை சொல்வார். இதையும் தாண்டி அவர் குத்தகைக்கு எடுத்திருந்த தென்னையில் எப்போதேனும் இளநீர் பறிக்க ஏறுகிற தைரியசாலிகள் நான்கைந்து பேர் இருந்தார்கள். நானும் ஒருசில நாட்கள் ஏறி இளநீர் பறித்து குடித்ததுண்டு. ஏற்கனவே அருகாமை வீடுகளோடு பகையை உருவாக்கி வைத்திருந்ததால், சுற்றியிருந்தவர்கள் குத்தகைக்காரருக்குச் சொல்லி விடுவார்கள். பகல் நேரமென்றால் அந்த மனிதர் சில ரவுடிகளோடு ஓடி வந்துவிடுவார். இரவென்றால் அடுத்த நாள் காலையில் வந்து கெட்டவார்த்தையால் அர்ச்சிப்பார்.

இப்படித்தான் 1990 இல், ஒருவிடுமுறை நாளில் ஒரு மாணவன் தென்னையில் ஏறி இரண்டு இளநீர் காய்களைப் பறித்துப் போட்டான். பக்கத்திலிருந்து தொலைபேசி செய்தி குத்தகைக்காரரை எட்டவும் அவர் ஒருசிலரோடு வந்துவிட்டார். ஏறிப் பறித்தவன் அவனது அறைக்குள் கொண்டுசென்று தின்றுவிட்டான். உருவத்தில் ஆறடி உயரம் கொண்ட அப்பாவியான மேல்மிடாலம் பகுதியைச் சார்ந்த ஐசக்ராஜ் அவனிடமிருந்து ஒரு இளனியை வாங்கி படிக்கட்டில் உட்கார்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆவேசத்தோடு வந்த குத்தகைக்காரர், அவனது கழுத்தில் கிடந்த துண்டையும் சட்டையையும் சேர்த்துப் பிடித்து இழுத்தபடி கெட்டவார்த்தைப் பேசுகிறார். அவனோ, ‘எங்களுக்கும் தென்ன எல்லாம் உண்டும். நான் ஒண்ணும் அலந்து ஒண்ணும் கெடக்கல்ல என்கிறான். அவன் ஐசக்கை இழுத்து வெளியே கொண்டு செல்ல முற்படுகிறான். பலரும் வேடிக்கைப் பார்த்து நின்றார்களேயொழிய அவனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. ஏதோ துணிச்சலில், ‘உங்க ஒரு இளனிக்கு காசு தரலாம்@ அவனுக்க சட்டைக்காளருல இருந்து கையை எடும் ஓய் என்றேன். அவன் என்னை முறைத்தான். அவனோடு வந்தவனில் ஒருவன் என்னை அடிக்க கை ஓங்கவும், எங்கள் விடுதி மாணவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது, வந்தவர்கள் நால்வரையும் சூழ்ந்து கொண்டதோடு, பைங்குளம் அருள்தாஸ் அண்ணன் கை ஓங்கினான். உடனே மற்ற மாணவர்களும் அவர்களை அடிக்கத் தயாரானார்கள். குத்தகைக்காரன் ஐசக் கழுத்தைச் சுற்றிப் பிடித்திருந்த பிடியை விட்டான். வீரம் வந்து பலரும் இப்போது கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள்.

‘நீரு அரசாங்கத்துலருந்து தெங்கு மட்டும்தானே குத்தகைக்கு எடுத்திருக்கீரு. ரெண்டு பிலாவுலயும் காச்சிய சக்கைய (பலாப்பழம்) எல்லாத்தையும் பறிச்சிட்டு போறீரு. அதையாவது இந்தப் பாவப்பட்ட பயலுவளுக்கு விட்டுட்டுப் போயிருந்தா அவனுவ அதயாவது பறிச்சு தின்னுவானுவ இல்லியா? பசியெடுக்கும்ப இளம் பயலுவ எதையாவது பறிக்கத்தான் செய்வானுவ என்றார் காவலர் முருகன்.

அவர் சொல்லி முடித்ததும், அனைத்து மாணவர்களும் ஓற்றைச் சப்தமாக ‘சக்க கள்ளண்டோய்!’ என்று கூக்குரலிட்டார்கள். குத்தகைக்காரன் முறைத்தபடி போய்விட்டான்.

பிரச்சினையில் மட்டுமல்ல, வேதனைகளில், வறுமையில் கைகொடுத்து உதவுகிற நட்புகளும் எங்கள் விடுதியில் இருந்தன. அப்படி என்னால் மறக்க முடியாத ஒருவர் எங்கள் விடுதியில் இருந்தார். அவர் கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளத்தைச் சார்ந்த அருள்தாஸ் அண்ணன். முதுகலை பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தார். இவர் ஒருவர்தான் சற்று வசதியானவரைப்போல் கையில் மோதிரம் போட்டிருப்பார்.

ஒருமுறை (1990) எங்கள் விடுதி நண்பர் வில்சன் அவரது சகோதரி திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க வெளியிலிருந்து கேமரா ஏற்பாடு செய்ய வசதியில்லை; ஏதேனும் வழியில் கேமரா இரவல் கிடைக்குமா? என்று கேட்டார். வறுமைக்கு இரங்குகிற நான் எங்கள் ஊரிலிருந்து ஸ்டீபன் என்பவரிடம் கேட்டு அவரது மாமா வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த கேமராவை வாங்கிக் கொடுத்தேன். கேமரா திரும்பி வந்த போது பாதிப்போடு வந்தது. புகைப்படம் எடுத்தபின் படச்சுருளை வெளியே எடுக்கத் தெரியாமல் இழுத்திருந்தனர். முறையாகப் பயன்படுத்தத் தெரியாததால் உள்ளே படச்சுருளை சுற்றிவிடுகிற உருளைகள் இரண்டும் உடைந்திருந்தது. படம் எடுக்கவும் முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. பல கடைகள் சரிசெய்ய முடியாது என மறுக்க, ஹனி கேமரா கடைக்காரர் பொறுப்பேற்று சரிசெய்தார். அவருக்குக் கொடுக்க எழுநூற்று ஐம்பது ரூபாய் என்னிடம் இல்லை. கேமராவை வாங்கிச் சென்றவரிடமும் இல்லை. அப்போது என்னை தனியாக அழைத்தார் அருள்தாஸ் அண்ணன். “அடுத்தவர்களிடமிருந்து இரவல் வாங்கிக் கொடுத்ததுக்கு உனக்குக் கிடைத்த பாடம்தான் இது. வறுமைக்கு வாழ்க்கைப் பட்டுட்டு இப்ப கடனாளியாவும் நிக்கிற. இந்தா இந்த மோதிரத்த அடகு வச்சு கேமராவ வாங்கி உரியவருக்கிட்ட கொடுத்துரு. ஒரு மாசத்துல மோதிரத்த எடுத்துத் தந்திரு என்றார்.

மோதிரத்தை வாங்கிய எனக்கு எங்கு அடகு வைப்பதென்று தெரியாது. என்ன செய்வதென்று யோசித்தபோது, நண்பன் திருவட்டார் சதீஷ் நான் வீட்டில் கொண்டுபோய் அடகு வைத்து நாளை பணத்தோடு வருகிறேன் என்றபடி உடனே விடுதியில் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனான். அடுத்தநாள் 750 ரூபாயோடு வந்தான். கேமராவை வாங்கி சோலாபுரம் ஸ்டீபன் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால் அடுத்தவர்களுக்காக இரவல் வாங்கியேனும் உதவுகிற குணம் இன்றளவும் என்னிடமிருந்து மாறவில்லை. அடி மேல் அடி விழுந்தும் இந்தக் குணம் என்னைவிட்டுப் போகவில்லை. பிறவிக் குணத்தை பேய்க்குக் கொடுத்தாலும் தீராது என்பார்களே, அதே கதைதான்.  

அருள்தாஸ் அண்ணனின் இந்த உதவி ஒருநாளோடு முடியவில்லை. எனக்காக இன்னொரு முறையும் அவர் மோதிரத்தைக் கழற்றினார். நான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது நடந்தது. 1991 மார்ச் 23 ஆம் தியதி தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாளாக இருந்தது. தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை. ஐநூறு ரூபாவிற்கும் குறைவாகத்தான் தேர்வுக் கட்டணம் இருந்தது. கடைசி தேதிக்கு இரண்டு நாட்களே இருந்தபோது, மார்ச் 21 ஆம் நாள் வியாழக்கிழமை நான் அறையில் சோகத்தோடு இருந்தேன். என் அறை எண் எட்டு பக்கமாக வந்த அருள்தாஸ் அண்ணன் காரணம் கேட்டார். காரணத்தைச் சொன்னதும் தன் கையில் கிடந்த மோதிரத்தை கழட்டி, ‘எங்கயாவது கொண்டு அடகு வச்சு உடனே பீஸ் கட்டிரு. மத்ததையெல்லாம் பிறகு பாத்துக்கலாம் என்றார். தயங்கிய என் கையைப் பிடித்துத் திணித்தது இன்றும் மறந்தபாடில்லை.

இப்போதும், நண்பன் திருவட்டார் சதீஷ் வீட்டிற்குப் போய் கேசவபுரத்தில் ஒருவர் வீட்டில் 500 ரூபாவிற்கு அடகு வைத்து அடுத்தநாள் மதியம் கல்லூரிக்கு வந்து ஒருநாள் முன்னதாகவே நான் தேர்வுக் கட்டணம் கட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். தேர்வு முடிந்து வீட்டிற்குப் போவதற்குள் எப்பாடுபட்டோ அவரது மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன். காலத்தினால் அவர் செய்த நன்றியை எப்படி மறக்க முடியும்?

இப்போது மாலத்தீவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் நிறைவோடு வாழுகிறார். மற்றவர்களது ஆபத்தில் ஓடிப்போய் உதவவேண்டும் என்கிற வாழ்க்கைப் பாடத்தை படித்துத் தந்தவர் இவர். இப்படி உதவப் போய் என்னுடைய பணத்தை லட்சக்கணக்கில் இழந்திருக்கிறேன். பல நேரங்களில் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன். இருந்தாலும் உதவுவதை நான் நிறுத்தவில்லை. இந்த உதவுதலில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. மன நிம்மதி இருக்கிறது. இறைமையோடு ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.   

(நினைவுகள் தொடரும் ….)        

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.